கொடுமுடி, சிவகிரி, சென்னிமலை பகுதியில் பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா
கொடுமுடி, சிவகிரி, சென்னிமலை பகுதியில் பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
ஈரோடு,
கொடுமுடி காங்கேயம் சாலையில் எஸ்.என்.பி. நகரில் வசித்து வருபவர் 40 வயது ஆண். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் சிட்டுபுள்ளாபாளையத்தை சேர்ந்த 35, 48, 58 வயதுடைய 3 ஆண்களுக்கும், ராசாம்பாளையத்தில் 48 வயது ஆணுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களும் பெருந்துறை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் அங்கு சென்று அந்த பகுதி முழுவதையும் தனிமைப்படுத்தினர். கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.
சிவகிரி நெசவாளர் காலனியை சேர்ந்த 40 வயது ஆண் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளி மாவட்டம் சென்று வந்தார். இதைத்தொடர்ந்து அவர் சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதேபோல் வெளிமாவட்டம் சென்று வந்த பாலமேட்டுப்புதூரை சேர்ந்த 45 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் அவர்கள் வசித்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
சென்னிமலையில் உள்ள 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் 35 வயதுள்ள ஆண். இவர் ஈங்கூர் அருகில் சிப்காட் தொழில் வளாகத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு காய்ச்சல் இருந்து வந்த காரணத்தால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அவருக்கு அந்த ஆஸ்பத்திரியிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை எடுத்து அவர்களை தனிமைப்படுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story