வன்முறையில் வீட்டுக்கு தீவைப்பு: எடியூரப்பாவுடன், அகண்ட சீனிவாசமூர்த்தி சந்திப்பு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்


வன்முறையில் வீட்டுக்கு தீவைப்பு: எடியூரப்பாவுடன், அகண்ட சீனிவாசமூர்த்தி சந்திப்பு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Aug 2020 4:30 AM IST (Updated: 18 Aug 2020 3:51 AM IST)
t-max-icont-min-icon

வன்முறையின்போது வீட்டுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவுடன், அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ. நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எடியூரப்பாவிடம் வலியுறுத்தினார்.

பெங்களூரு,

பெங்களூரு புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அகண்ட சீனிவாசமூர்த்தி. இவரது சகோதரியின் மகன் நவீன் என்பவர் சிறுபான்மையினருக்கு எதிராக தனது முகநூலில் கருத்து பதிவிட்டதால் கடந்த 11-ந் தேதி டி.ஜே.ஹள்ளியில் வன்முறை ஏற்பட்டது. அப்போது காவல் பைரசந்திராவில் உள்ள அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டுக்கு மர்மநபர்கள் தீவைத்தனர். இதில், அவரது வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. ரூ.3 கோடிக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில், பெங்களூரு காவேரி இல்லத்தில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ. பேசினார்.

அப்போது வன்முறையில் தன்னுடைய வீட்டுக்கு தீவைத்திருப்பதுடன், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் தனக்கும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும்படியும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும், இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் எடியூரப்பாவிடம் வலியுறுத்தினார். அப்போது அகண்ட சீனிவாசமூாத்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீஸ் கமிஷனருக்கு, எடியூரப்பா உத்தரவிட்டார். அதே நேரத்தில் அகண்ட சீனிவாசமூர்த்தியிடம், “உங்களுக்கு ஆதரவாக அரசு துணை நிற்கும், அதனால் கவலைப்பட வேண்டாம்” என்று எடியூரப்பா கூறியுள்ளார். பின்னர் அகண்ட சீனிவாசமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து பேசினேன். சம்பவம் குறித்து அவரிடம் கூறியதுடன், எனக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொண்டேன். என்னுடைய பாதுகாப்புக்கு 2 போலீசார் உள்ளனர். மேலும் பாதுகாப்பு அளிப்பதாக எடியூரப்பா உறுதி அளித்துள்ளார். நான் பா.ஜனதாவில் சேரப்போவதாக வெளியாகும் தகவல் உண்மை அல்ல. நான் பா.ஜனதாவில் சேர மாட்டேன். காங்கிரஸ் கட்சியிலேயே இருப்பேன். இந்த விவகாரத்தில் எனக்கு அரசு முழு ஆதரவாக உள்ளது.

அதுபோல, காங்கிரஸ் தலைவர்களான டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். புலிகேசிநகர் தொகுதியில் வசிப்பவர்கள் எனது வீட்டுக்கு தீவைத்திருக்க வாய்ப்பில்லை. வெளியில் இருந்து வந்தவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே வன்முறை சம்பவம் நடந்த பகுதிகளில் உண்மை நிலவரம் குறித்து அறிய காங்கிரஸ், பா.ஜனதா சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வன்முறை நடந்த பகுதிகளையும், அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீட்டையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுபோல நேற்று கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் வன்முறை நடந்த பகுதிகளில் ஆய்வு செய்தார். பின்னர் அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கும் சென்று ஆய்வு செய்தார். அதையடுத்து அகண்ட சீனிவாசமூர்த்திக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலையுடன் 144 தடை உத்தரவு முடிய இருந்த நிலையில் வருகிற 21-ந் தேதி காலை 6 மணி வரை கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை நீட்டித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கிடையே வன்முறை சம்பவம் தொடர்பாக நவீன் உள்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் நவீனை வீடியோ கால் மூலம் பெங்களூரு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நவீனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சிறுபான்மை சமுதாயத்தினர் குறித்து முகநூலில் அவதூறு கருத்தை பதிவு செய்தது நான் தான் என்று நவீன் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் நேற்றுடன் நவீனுக்கு நீதிபதி வழங்கிய 5 நாட்கள் போலீஸ் காவல் நிறைவு பெற்றது. இதனால் அவரை மீண்டும் போலீசார் வீடியோ கால் மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அதன்பேரில் நவீனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நவீனை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

Next Story