தஞ்சை அருகே பரிதாபம்: மனைவி இறந்த வேதனையில் தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை


தஞ்சை அருகே பரிதாபம்: மனைவி இறந்த வேதனையில் தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Aug 2020 4:15 AM IST (Updated: 18 Aug 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே மனைவி இறந்த வேதனையில் தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர், 

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை சண்முகா நகரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 41). என்ஜினீயரான இவர், மஸ்கட்டில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி வினோதினி(30). இவர்களுக்கு 3 வயதில் தர்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த ஜனவரி மாதம் சுரேஷ், மஸ்கட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினார்.

அதன் பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் வெளிநாடு செல்லவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று வினோதினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மனைவி இறந்ததால் வேதனை அடைந்த சுரேஷ் மிகுந்த மன வேதனை அடைந்தார். மனைவி இறந்ததில் இருந்து யாருடனும் சரியாக பேசாமல் இருந்த அவர் தனது மனைவி சென்ற இடத்துக்கே தானும் செல்வது என்று முடிவு செய்தார். இதனையடுத்து நேற்று அதிகாலை அவர் வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவி இறந்த வேதனையில் கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story