அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் கொலையில் தேடப்பட்ட 6 பேர் சரண் - கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் தகராறில் கொன்றதாக திடுக்கிடும் தகவல்


அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் கொலையில் தேடப்பட்ட 6 பேர் சரண் - கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் தகராறில் கொன்றதாக திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 18 Aug 2020 6:40 AM IST (Updated: 18 Aug 2020 6:40 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேடப்பட்டவர்களில் 6 பேர் போலீசில் சரண் அடைந்தனர். கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் தகராறில் கொன்றதாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

வில்லியனூர்,

புதுச்சேரி வில்லியனூர் நடராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் வார்டு மணி என்கிற ராமகிருஷ்ணன்(வயது45). அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். வில்லியனூர் மாட வீதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் நிர்வாகியாவும் இருந்தார். நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் புறவழிச்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது பின்தொடர்ந்து வந்தவர்கள் கீழே தள்ளி அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர்.

இந்த கொலை சம்பவம் வில்லியனூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், வில்லியனூர் முத்தாலம்மன் கோவிலுக்கு பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இதில் ஆரியபாளையம் பகுதியில் உள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்து இருந்ததாகவும், அதை காலி செய்யுமாறு வார்டு மணி வற்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பிரபல ரவுடிகளான உருவையாறு பகுதியை சேர்ந்த ஜாக் என்கிற ஜெகன், குரங்கு விஜி, கணுவாப்பேட்டை ஜமால் என்கிற ஜமாலுதீன், புதுநகர் பகுதி தக்காளி என்கிற தோபிக் ரகுமான் ஆகியோர் நிலம் தொடர்பாக பேசியதும் அவர்களை வார்டுமணி கண்டித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து வார்டு மணியை கொலை செய்வது என முடிவு செய்து அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து வந்தனர். இதற்காக அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வில்லியனூர் புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற வார்டு மணியை வெட்டிக் கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

சம்பவ இடத்தை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா நேற்று காலை பார்வையிட்டார். இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மேற்பார்வையில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் வார்டு மணி கொலை தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த உருவையாறு ஜாக் என்கிற ஜெகன், குரங்கு விஜி, ஜமால் என்கிற ஜமாலுதீன், தக்காளி என்கிற தோபிக் ரகுமான், விக்கி, மணிகண்டன் ஆகிய 6 பேர் நேற்று மங்கலம் போலீசில் சரண் அடைந்தனர். இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் வில்லியனூர் போலீசார் அங்கு சென்று அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தி, கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

வார்டு மணி கொலை சம்பவத்தையொட்டி நேற்று வில்லியனூர் மாடவீதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வில்லியினூர் சங்கரபரணி ஆற்றங்கரையில் வார்டு மணியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் வில்லியனூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story