கஜா புயலுக்குப்பின் புனரமைக்கப்பட்ட தென்னந்தோப்புகளில் அதிகாரி ஆய்வு
கஜா புயலுக்குப்பின் புனரமைக்கப்பட்ட தென்னந்தோப்புகளில் சென்னை வேளாண்மை இயக்குனரக துணை இயக்குனர் பொன்மலர் ஆய்வு செய்தார்.
திருமக்கோட்டை,
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தன. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருமக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மூலம் கஜா புயல் வாழ்வாதார தொகுப்பு திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
அந்த தென்னங்கன்றுகளை விவசாயிகள் தங்கள் தோப்புகளில் நட்டு பராமரித்து வருகிறார்கள். தென்னையில் ஊடுபயிராக உளுந்து, எள், கடலை, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர். இந்த நிலையில் திருமக்கோட்டை, ராதாநரசிம்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலுக்குப்பின் புனரமைக்கப்பட்ட தென்னந்தோப்புகளை சென்னை வேளாண்மை இயக்குனரக துணை இயக்குனர் பொன்மலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல்துறை பேராசிரியர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் சாமிநாதன், மீனா, வேளாண்மை அலுவலர்கள் சிவானந்தம், முத்துராஜ், மணிமேகலை, துணை வேளாண்மை அலுவலர்கள் ரவி, காத்தையன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story