கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால்: வானகரத்தில் பூ மார்க்கெட் அமைக்கும் பணிகள் தீவிரம் - கடைகளுக்கு வாடகை கேட்பதால் வியாபாரிகள் அதிருப்தி


கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால்: வானகரத்தில் பூ மார்க்கெட் அமைக்கும் பணிகள் தீவிரம் - கடைகளுக்கு வாடகை கேட்பதால் வியாபாரிகள் அதிருப்தி
x
தினத்தந்தி 18 Aug 2020 7:36 AM IST (Updated: 18 Aug 2020 7:36 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு உள்ளதால் வானகரத்தில் பூ மார்க்கெட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கடைகளுக்கு வாடகை கேட்பதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பூந்தமல்லி,

கொரோனா தொற்று காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடந்த 4 மாதங்களாக முடப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவைக்காக பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தையும், மாதவரம் பஸ் நிலையத்தில் பழ மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது.

ஆனால் பூ மார்க்கெட்டுக்கு எங்கேயும் இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் பூ வியாபாரிகள் ஆங்காங்கே சாலையோரங்கள் மற்றும் தனியார் இடங்களை வாடகைக்கு எடுத்து கடை நடத்தி வருகின்றனர்.

தற்போது வானகரத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தை சீரமைத்து அங்கு பூ மார்க்கெட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் இதற்கு 3 மாத வாடகை முன் பணமாகவும், மாதம் தோறும் வாடகையும் செலுத்த வேண்டுமென பூ வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பூ வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் 650 கடைகள் செயல்பட்டு வந்தது. ஊரடங்கால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளநிலையில் வடபழனி, வானகரம், கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரங்கள் மற்றும் தனியார் இடங்களை கூட்டாக வாடகைக்கு எடுத்து 20 முதல் 30 கடைகளாக வைத்து பூ வியாபாரம் செய்து வருகிறோம்.

கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்ட ஆரம்ப நிலையில் பூ வரத்து குறைந்துவிட்டது. பின்னர் வியாபாரிகள் எடுத்த முடிவால் தற்போது பூ வரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. பூ வியாபாரம் இல்லை என்றால் விவசாயிகள் பூ விவசாயத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு காய்கறி, பழங்கள் போன்றவற்றை விவசாயம் செய்ய மாறிவிடுவார்கள். இதனால் பூக்கள் தட்டுப்பாடு ஏற்படும்.

காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டுக்கு வாடகை ஏதும் இல்லாமல் அரசு இலவசமாக இடம் அமைத்து கொடுத்ததுபோல் எங்களுக்கும் வானகரத்தில் அமைய உள்ள பூ மார்க்கெட்டை வாடகை ஏதும் இல்லாமல் இலவசமாக வழங்க வேண்டும்.

தற்போது நாங்கள் தனியார் இடங்களில் வாடகை கொடுத்து கடைகளை நடத்தி வந்தாலும் சமூக விலகளோடு நடத்தி வருகிறோம். ஆனால் வானகரம் பகுதியில் அனைத்து கடைகளையும் ஒன்றாக தொடங்கினால் சமூக விலகலை கடைப்பிடிப்பது கேள்விக்குறியாக மாறிவிடும். அதிக மக்கள் இங்கு ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த இடத்தில் பூ மார்க்கெட்டை திறப்பதை காட்டிலும் கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறந்து கொடுத்தால் வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நிலையில் வானகரம் பகுதியில் பூ மார்க்கெட் அமைத்தால் அதிகளவில் வாகனங்கள் வரும். இதனால் வாகன நெரிசலும், விபத்துகளும் ஏற்படும். அதிகளவில் மக்கள் கூடினால் இங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு பூ மார்க்கெட் அமைக்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்து வானகரம் ஊராட்சி சார்பில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Next Story