மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - 4 அமைச்சர்கள் பங்கேற்பு
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 4 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டூர்,
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 1-ந் தேதி கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஆகஸ்டு 1-ந் தேதி அல்லது அதற்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறக்கப்படும்.
இவ்வாறு தொடர்ந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்தாண்டு பல்வேறு காரணங்களால் சுமார் 16 நாட்கள் கால தாமதமாக நேற்று காலை 10 மணியளவில் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேட்டூர் அணையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டு கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு அணையில் இருந்து மின்விசை மூலம் மதகுகள் வழியாக தண்ணீரை திறந்து வைத்தனர்.
இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதாவது கிழக்கு கரை கால்வாய் பாசனம் மூலம் 27 ஆயிரம் ஏக்கரும், மேற்கு கரை கால்வாய் பாசனம் மூலம் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. முதலில் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர், பாசனத்தின் தேவைக்கு ஏற்ப வினாடிக்கு 1000 கன அடி வரை திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் மதகுகள் திறந்தவுடன் கால்வாய்களில் சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரை அமைச்சர்களும், அதிகாரிகளும், விவசாயிகளும் மலர் தூவி அனுப்பினர். தண்ணீர் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை 137 நாட்கள் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு இதற்கு முன் ஆகஸ்டு மாதத்திற்கு முன்னதாக 16 முறையும், ஆகஸ்டு மாதத்தில் 33 முறையும், ஆகஸ்டு மாதத்திற்கு பின்பு 13 முறையும் என தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு இதுவரை மனிதசக்தி மூலம் மதகுகள் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.95லட்சம் மதிப்பீட்டில் மின்விசை மூலம் மதகுகள் திறக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டதால் நேற்று அதன் மூலம் முதல் முறையாக அமைச்சர்கள் தண்ணீர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏக்கள் செம்மலை (மேட்டூர்), வெங்கடாஜலம் (சேலம் மேற்கு), ராஜா (சங்ககிரி), மனோன்மணி (வீரபாண்டி), சக்திவேல் (சேலம் தெற்கு), வெற்றிவேல் (ஓமலூர்), சின்னத்தம்பி (ஆத்தூர்), சித்ரா (ஏற்காடு), பொன்.சரஸ்வதி (திருச்செங்கோடு), ராஜா என்ற ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story