சேலம், நாமக்கல்லில் தூய்மை பணியாளர் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலி
சேலம், நாமக்கல்லில் தூய்மை பணியாளர் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சர்க்கரை நோயாளி என்பதால் டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இதேபோல் குமாரபாளையத்தை சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் தினமும் ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 57 வயதுடைய ஒருவர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றினார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தூய்மை பணியாளர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் சேலம் குகை பகுதியை சேர்ந்த 70 வயதுடைய முதியவர், குகை தொல்காப்பியர் தெருவை சேர்ந்த 65 வயதுடைய முதியவர், வாழப்பாடி பகுதியை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர், குடியாத்தம் பகுதியை சேர்ந்த 73 வயதுடைய முதியவர், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை சேலம் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என 100 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story