விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிலேயே கொண்டாட வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் வினய் அறிவுறுத்தி உள்ளார்.
மதுரை,
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடர்பாக பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் வினய் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 22-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் மத்திய அரசின் வழிகாட்டுதலோடு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.
அதே போல் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திட வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
சிறிய கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story