வாவிபாளையத்தில் டாஸ்மாக் கடை திறந்ததை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் - கடைகள் அடைப்பு
திருப்பூர் வாவிபாளையத்தில் புதிய டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். கடைகளும் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த வாவிபாளையம் வெலாங்காடு என்ற பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த தகவல் அறிந்ததும் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கடந்த 15-ந்தேதி மாலை வாவிபாளையம் சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடை பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்றும், பொதுமக்கள் சார்பில் வாவிபாளையம் சந்திப்பில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று மதியம் 2 மணிக்கு அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டன. பின்னர் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் வாவிபாளையம் சந்திப்பில் திரண்டனர். பின்பு அதே இடத்தில் சாலையோரம் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதுடன், டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதன் காரணமாக சம்பவ இடத்திற்கு கே.சுப்பராயன் எம்.பி., திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் மற்றும் டாஸ்மாக், வருவாய்துறை அதிகாரிகள் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு தற்காலிகமாக கடையை மூட டாஸ்மாக் தரப்பில் அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் நாளை (இன்று) மதியம் 12 மணிக்கு அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் முத்தரப்பு சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதுவரை கடை திறக்கப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
இதன் பின்னரே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது சம்பவ இடத்திற்கு 2 பஸ்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் அனைவரும் கைது செய்யப்படலாம் என்ற சூழலும் அங்கு நிலவியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக மறியலை கைவிட செய்தார்.
பின்னர் பொதுமக்கள் மீண்டும் சாலையோரம் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை 4 மணி நேரம் நடைபெற்ற தொடர் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story