ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு: தூத்துக்குடியில் அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு: தூத்துக்குடியில் அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2020 4:00 AM IST (Updated: 19 Aug 2020 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தினர். இதில் 13 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு பல மாதங்களாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. நேற்று நீதிபதிகள் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு கூறினர். இதில் தமிழக அரசு ஆலையை மூட விதித்த தடை தொடரும் என்றும், ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பை அறிந்ததும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் மற்றும் பழைய பஸ்நிலையம், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் பாத்திமா பாபு, தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கர், வக்கீல் அதிசயகுமார், செந்தில் ஆறுமுகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞர் அணி ஆனந்த் கேபிரியேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் ராஜாஜி பூங்கா முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல், மாநகர செயலாளர் ராஜா, இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பிரபு, மகேஷ் உள்ளிட்டோர் ராஜாஜி பூங்கா முன்பு திரண்டு வந்து ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது சிலர் பட்டாசு வெடிக்க முயன்றனர். ஆனால் போலீசார் பட்டாசு வெடிக்க விடாமல் தடுத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

ஐகோர்ட்டு வழங்கி உள்ள இந்த தீர்ப்பு 23 ஆண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. 13 பேர் உயிர் இழப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். இதே போன்ற தீர்ப்புகள் கடந்த ஆண்டுகளில் 3 முறை வழங்கப்பட்டு உள்ளது. ஆனாலும் உச்சநீதிமன்ற முறையீடுகளின் அடிப்படையில் அந்த ஆலை மீண்டும் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த முறை கொடுத்த தீர்ப்பு இறுதியாக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்திலும் அடுத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மாநில அரசு போராடி தடுக்கவேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவரின் உறவினர் வேலுமணி கூறுகையில், துப்பாக்கி சூட்டில் எனது சகோதரன் இறந்துவிட்டார். 2 ஆண்டுகளாக இருந்த ரணத்திற்கு கிடைத்த சிறிய மருந்தாக இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது. இருப்பினும் இந்த தீர்ப்பு நிரந்தமானதாக இருந்து இந்த மண்ணில் அந்த ஆலையை அகற்றவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். மேலும் தற்போது வந்துள்ள தீர்ப்பு மட்டுமே துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய ஒரு காரணமாக இருக்கும். இந்த தீர்ப்பை நாங்கள் உளமாற வரவேற்கிறோம் என்றார்.

உடன்குடி பஸ் நிலையத்தில் த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஆசாத் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் குணசீலன், சி.பி.எம். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மகராஜன், இசக்கியம்மாள், த.மு.மு.க. நிர்வாகி ஷபியுல்லாஹ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், மாவட்ட செயலாளர் கதிரேசன், மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர். சாத்தான்குளத்தில் ம.தி.மு.க. சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் பலவேச பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story