மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்கக்கோரி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்கக்கோரி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2020 3:00 AM IST (Updated: 19 Aug 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்கக்கோரி நெல்லை, தென்காசியில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

தமிழகம் முழுவரும் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். காமராஜ், சுரேஷ், வலதி, பெருமாள், கந்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் சுடலைராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் மோகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேணடும். ஆட்டோ தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க, அனைத்து ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பத்துக்கும் மாதம் ரூ.7,500 வீதம் 6 மாதத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வாகன தகுதிச்சான்று, காப்பீடு, அனுமதிச்சான்று போன்றவற்றை புதுப்பிக்க ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் கடன் வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆட்டோ தொழிற்சங்க பொருளாளர் தேவி நன்றி கூறினார்.

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் ஜெகன் அற்புதராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வீரபுத்திரன், ரவி என்ற ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாகனங்களுக்கு தகுதிச்சான்று, காப்பீடு, அனுமதிச்சான்று போன்றவற்றை புதுப்பிக்க ஓராண்டு கால அவகாசம் நீட்டித்து வழங்க வேண்டும். இதற்காக அபராதமோ, வாகன பறிமுதலோ செய்ய கூடாது என்று அரசாணை வெளியிட வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட அனைத்து அபராதங்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்ற அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்துக்கும் மாதம் ரூ.7,500 வீதம் 6 மாத காலத்திற்கு வழங்க வேண்டும். கடந்த 5 மாத காலமாக ஊரடங்கு உத்தரவினால் வருமானம் இல்லாமல் தவித்து வரும் ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேல்முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் கணபதி, ராஜசேகர், தாணு மூர்த்தி, லெனின்குமார், கிருஷ்ணன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கி விட்டு கலைந்து சென்றனர்.

அம்பை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட குழு உறுப்பினர் முத்துராமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இசக்கி ராஜ், சுடலைமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் சுரேஷ், பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story