மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு புதுவரவாக வந்த ஆப்பிரிக்க சிறுத்தைகள் தனிமை காலத்துக்கு பின்பு பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும்


மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு புதுவரவாக வந்த ஆப்பிரிக்க சிறுத்தைகள் தனிமை காலத்துக்கு பின்பு பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும்
x
தினத்தந்தி 19 Aug 2020 5:08 AM IST (Updated: 19 Aug 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

தென்ஆப்பிரிக்காவில் இருந்து மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு புதுவரவாக ஆப்பிரிக்க சிறுத்தைகள் வந்துள்ளன. அந்த சிறுத்தைகள் தனிமை காலத்துக்கு பிறகு பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மைசூரு,

கர்நாடகத்தின் அரண்மனை நகரம் என்று மைசூரு அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு புகழ்பெற்ற சாமராஜேந்திரா மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையில் சிங்கம், புலி, சிறுத்தை, யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட வனவிலங்குகளும், ஏராளமான பறவை இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் இருந்து மைசூருவுக்கு வனவிலங்குகள் புதுவரவாக வரவழைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தென்ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் 3 ஆப்பிரிக்க சிறுத்தைகள் புதுவரவாக மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு வந்துள்ளன. 14, 15 மற்றும் 16 மாத வயதுடைய இந்த சிறுத்தைகள் தென்ஆப்பிரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வழியாக நேற்று முன்தினம் மதியம் பெங்களூருவுக்கு விமானத்தில் வந்தன. பின்னர் அங்கிருந்து ஆப்பிரிக்க சிறுத்தைகள் மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு ஆண் சிறுத்தையும், 2 பெண் சிறுத்தைகளும் அடங்கும்.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், தென்ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள், மைசூரு மிருகக்காட்சி சாலையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சிறுத்தைகளின் தனிமை காலம் முடிவடைந்த பிறகு பொதுமக்களின் பார்வைக்கு விடப்படும் என்று மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மைசூரு மிருகக்காட்சி சாலை டுவிட்டர் பக்கத்தில், ‘வனவிலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 3 ஆப்பிரிக்க சிறுத்தைகள் மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு புதுவரவாக வந்துள்ளது. இந்த முயற்சியை எடுத்த மிருகக்காட்சி சாலை இயக்குனர் அஜித் குல்கர்னி தலைமையிலான குழுவினருக்கு வாழ்த்துகள். ஆப்பிரிக்க சிறுத்தைகள் மைசூரு மிருகக்காட்சி சாலையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. தனிமை காலம் முடிவடைந்த பின்னர், அவை பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் இருந்து மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு புதுவரவாக வந்துள்ள இந்த ஆப்பிரிக்க சிறுத்தைகள், உலகத்திலேயே மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கினங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story