தளர்வில்லா முழு ஊரடங்கு அமல் புதுவை வெறிச்சோடியது கடைகள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டன


தளர்வில்லா முழு ஊரடங்கு அமல் புதுவை வெறிச்சோடியது கடைகள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 19 Aug 2020 6:47 AM IST (Updated: 19 Aug 2020 6:47 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தளர்வில்லா முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனால் முக்கிய சாலைகள் வெறிச் சோடின. கடைகள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டன.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக இருந்தபோது அண்டை மாநிலமான தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

பல்வேறு தளர்வுகளுடன் 5-ம்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் பாதித்து வருகிறார்கள். இதனால் கொரோனா சிகிச்சைக்கு வரும் நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து படுக்கை வசதிகள் இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் அவர்கள் கட்டுப்பாடின்றி ஊர் சுற்றி வருவதால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கடந்த சில வாரங்களாக தினந்தோறும் உயிர்ப் பலியும் ஏற்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துமாறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.

அதன்பேரில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தை கூட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். இதிலும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அண்டை மாநிலமான தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வருவது போல் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கை கடைப்பிடிப்பது எனவும், ஓட்டல்கள், கடைகள் திறப்பு நேரத்தை குறைத்தும் அரசு அறிவித்தது. அதன்படி தற்போது கடைகள், ஓட்டல்கள் இரவு 7 மணிக்கே மூடப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் நாளான நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை 6 மணி முதல் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிவரை ஊரடங்கு புதுச்சேரி, காரைக்காலில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக புதுவையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள், மதுக்கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. பெரியமார்க்கெட், சின்ன மார்க்கெட், மீன் மார்க்கெட்டுகள், பஸ் நிலைய தற்காலிக மார்க்கெட், குபேர் பஜார், உழவர் சந்தை ஆகியவையும் திறக்கப்படவில்லை. முக்கிய கடை வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை உள்ளிட்டவை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

நகர பகுதி மற்றும் காரைக்காலுக்கு இயக்கப்பட்டு வந்த பி.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆட்டோக்களும் ஓடவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகளும் இயங்கவில்லை. அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளான மருந்துக்கடைகள், பாலகங்கள், சமையல் கியாஸ் வினியோகம் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டன.

மாநில எல்லைகளில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கெடுபிடி காட்டினர். மருத்துவ தேவைக்காக வந்தவர்களை மட்டும் அனுமதித்தனர். இதுதவிர முக்கிய சந்திப்புகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தவர்களை பிடித்து எச்சரித்ததுடன் அபராதமும் வசூலித்தனர்.

இதேபோல் காரைக்காலிலும் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மாவட்டத்தின் பிரதான சாலைகளான பாரதியார் வீதி, திருநள்ளாறு வீதி, மாதா கோவில் வீதி உள்பட அனைத்து பகுதிகளும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. அரசுத்துறை அலுவலகங்களும் இயங்கவில்லை. முக்கிய சந்திப்புகளில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story