திருச்செங்கோடு அருகே, அரசு பள்ளி ஆசிரியை மர்ம சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்
திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி ஆசிரியை மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த சின்னமணலி அருகே சேர்வாம்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவருடைய மனைவி அத்தாயி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருந்தனர். இதில் கடைசி மகள் பாலாமணி (வயது 33). இவர் எம்.ஏ., பி.எட்., எம்.பில். படித்துள்ளார். பாலாமணி திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இவருக்கும், எலச்சிபாளையம் அகரம் ஊராட்சி எலிமேடு அருகே ஓலப்பாளையம் வண்ணாத்திகாடு பகுதியை சேர்ந்த சிதம்பரம் (35) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிதம்பரம் பி.டெக். படித்துள்ளார். சிதம்பரம், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஹேமாஸ்ரீ (1½) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சிதம்பரம் மனைவியிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி திறக்கப்படவில்லை. இதனால் சேர்வாம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் சில நாட்களாக தங்கியிருந்த பாலாமணி கடந்த 2 நாட்களுக்கு முன் ஓலப்பாளையம் கணவர் வீட்டிற்கு வந்தார். அங்கு நேற்று முன்தினம் மாலை மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடல் தூக்கில் தொங்கியது. இதுகுறித்து சிதம்பரம், எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், பாலாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பாலாமணியின் உடலை வாங்க மறுத்து பாலாமணியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு வேலூர் ரோட்டில் நேற்று மாலை திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பாலாமணியின் கணவர் சிதம்பரம் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றரை வயது பெண் குழந்தை ஹேமாஸ்ரீயை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 1 மணிநேரம் சாலை மறியல் நடந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆனதால் திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் விசாரணை நடத்தினார். பாலாமணி சாவு குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story