ஊரடங்கால் வருமானம் இன்றி தவிப்பு: ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி டிரைவர் தற்கொலை முயற்சி - கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு
ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த டிரைவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் கம்மியம்பேட்டை பராசக்திகோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவருடைய மகன் சுரேஷ் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை 6.30 மணி அளவில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திற்குள் தனது ஆட்டோவுடன் சென்றார்.
பின்னர் அங்கு ஆட்டோவை நிறுத்தி, தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து ஆட்டோ மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். அவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பார்த்து ஓடி வந்து ஆட்டோவில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இருப்பினும் ஆட்டோவின் மேல் பகுதி எரிந்து சேதமானது. இதையடுத்து அவரை மீட்டு கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனக்கு ரேஷன் கார்டு இல்லாததால் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியவில்லை. அரசு வழங்கிய ரூ.1000 நிவாரண நிதியும் தனக்கு கிடைக்கவில்லை. கடன் வாங்கி ஆட்டோ வாங்கி இருந்தேன். ஆனால் ஊரடங்கு உத்தரவால் சரிவர சவாரி கிடைக்கவில்லை. போதிய வருமானம் இல்லாததால் தவணையையும் கட்ட முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தி தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையில் அவருக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டதால் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் இந்த சம்பவத்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story