புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்: கடலூர் மாவட்ட வாகனங்கள் செல்ல தடை - போலீசார் திருப்பி அனுப்பினர்


புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்: கடலூர் மாவட்ட வாகனங்கள் செல்ல தடை - போலீசார் திருப்பி அனுப்பினர்
x
தினத்தந்தி 19 Aug 2020 10:15 AM IST (Updated: 19 Aug 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடலூர் மாவட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் போலீசார் வாகனங்களை திருப்பி விட்டனர்.

கடலூர், 

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு எடுத்து வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது போல் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி செவ்வாய்க்கிழமையான நேற்று புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

அதேபோல் கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதை மீறி சென்ற வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி, வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பினர். இதனால் புதுச்சேரி வழியாக சென்னை செல்ல முயன்றவர்கள் மீண்டும் கடலூர் வந்து விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் சென்றனர். அதேவேளை அவசர மருத்துவ தேவைக்காக சென்றவர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். இருப்பினும் அவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை புதுச்சேரி போலீசார் தடுத்து நிறுத்தி மீண்டும் கடலூருக்கே அனுப்பி விட்டனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பின்னர் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.

Next Story