தேனி மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி - புதிதாக 295 பேருக்கு தொற்று
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ள நிலையில், புதிதாக 295 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 189 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அவர்களில் 156 பேர் பலியாகினர்.
இந்தநிலையில் போடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் 2 ஊழியர் கள், போடி நகர் போலீஸ் நிலைய போலீஸ்காரர், உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் ஏட்டு, கம்பம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர், ஆண்டிப்பட்டி தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை மேலாளர், மார்க்கையன்கோட்டை பேரூராட்சி தூய்மை பணியாளர் ஆகியோர் உள்பட 295 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேனி பொம்மையகவுண்டன்பட்டி பாலர் தெருவை சேர்ந்த 52 வயது நபர், ஆண்டிப்பட்டி சக்கம்பட்டியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, போடி தருமத்துப்பட்டியை சேர்ந்த 55 வயது நபர், வைகை அணை அருகில் உள்ள காலனி பகுதியை சேர்ந்த 53 வயது பெண், போடி வினோபாஜி காலனியை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகிய 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story