வேர்கிளம்பியில், டெம்போ மோதி 8 வயது சிறுவன் பலி


வேர்கிளம்பியில், டெம்போ மோதி 8 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 19 Aug 2020 12:15 PM IST (Updated: 19 Aug 2020 11:47 AM IST)
t-max-icont-min-icon

வேர்கிளம்பியில் டெம்போ மோதி 8 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பத்மநாபபுரம், 

திருவட்டார் அருகே வேர்கிளம்பி, கரிமங்கலத்துவிளையை சேர்ந்தவர் அப்சல் கான், ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் முகமது அகனாப் (வயது 8). இவன் நேற்று தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வேர்கிளம்பி பகுதிக்கு சென்றான். வேர்கிளம்பி சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த மினி டெம்போ முகமது அகனாப் மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான்.

விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அவர்கள் சிறுவனை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தலங்களில் பரவி வருகிறது. இது அந்த பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story