நெல்லை அருகே வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி


நெல்லை அருகே வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி
x
தினத்தந்தி 20 Aug 2020 6:00 AM IST (Updated: 20 Aug 2020 1:24 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஏரல்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மேல மங்கலகுறிச்சியைச் சேர்ந்தவர் பிச்சையா பாண்டியன். இவருடைய மகன் துரைமுத்து (வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது ஏரல், ஸ்ரீவைகுண்டம், நெல்லை பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த துரைமுத்து பின்னர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

எனவே அவரை பிடிப்பதற்காக, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நெல்லை அருகே தூத்துக்குடி மாவட்ட எல்லையான வல்லநாடு அருகே மணக்கரை மலையடிவாரத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் துரைமுத்து கூட்டாளிகளுடன் பதுங்கி இருந்தார். அவர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றபோது, துரைமுத்து திடீரென்று போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசினார்.

இதில் போலீஸ்காரர் சுப்பிரமணியன் (26) தலைசிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வெடிகுண்டு வெடித்ததில் துரைமுத்துவும் இறந்தார். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலையில் போலீஸ்காரர் சுப்பிரமணியன், ரவுடி துரைமுத்து ஆகியோரது உடல்களை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தனர். அவர்களது உடல்களில் வெடிகுண்டு சிதறல்கள் இருப்பதை கண்டறிவதற்காக, உடல்களை அருகில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு தனித்தனி ஆம்புலன்ஸ்களில் ஏற்றி சென்றனர். அங்கு அவர்களது உடல்களை எக்ஸ்ரே ஸ்கேன் செய்தனர். இதில் இருவரது உடல்களிலும் ஆணி சிதறல்கள் அதிகளவில் இருந்தன.

தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் சுப்பிரமணியனின் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது. மதியம் 2.40 மணி அளவில் பிரேத பரிசோதனை முடிந்ததும், சுப்பிரமணியனின் உடலுக்கு அவரது மூத்த அண்ணன் சித்தர் மாலை அணிவித்தார். தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் இருந்த பெட்டியை போலீஸ் அதிகாரிகள் வெளியே தூக்கி வந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆம்புலன்சில் ஏற்றினர். சுப்பிரமணியனின் உடலை அவரது சொந்த ஊரான ஏரல் அருகே பண்டாரவிளைக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸ் சென்ற வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பண்டாரவிளையில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டுக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், போலீசார், கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். சுப்பிரமணியனின் மனைவி புவனேசுவரி கைக்குழந்தையுடன் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினர். மேலும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வும் ஆறுதல் கூறினார்.

பின்னர் சுப்பிரமணியனின் உடலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றி, இறுதி ஊர்வலமாக அங்குள்ள கல்லறை தோட்டத்துக்கு கொண்டு சென்றனர். அந்த வாகனம் கல்லறை தோட்டத்தை சென்றடைந்ததும், சுப்பிரமணியன் உடல் இருந்த பெட்டியை தென்மண்டல ஐ.ஜி. முருகன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் தூக்கி வந்து, கல்லறை தோட்டத்தில் இறக்கி வைத்தனர்.

தொடர்ந்து சுப்பிரமணியனின் உடலுக்கு போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, ஏரல் தாசில்தார் அற்புதமணி மற்றும் அதிகாரிகள், போலீசார் மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து சுப்பிரமணியனின் உடலுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து 10 போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் மூன்று முறை சுட்டனர். 30 குண்டுகள் முழங்க சுப்பிரமணியனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story