வேலூருக்கு இன்று வருகை: விவசாயிகள், தொழில்முனைவோருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆய்வு


வேலூருக்கு இன்று வருகை: விவசாயிகள், தொழில்முனைவோருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆய்வு
x
தினத்தந்தி 20 Aug 2020 4:00 AM IST (Updated: 20 Aug 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) வேலூர் வருகிறார். அவர் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்கிறார். விவசாயிகள், தொழில்முனைவோருடனும் கலந்துரையாடுகிறார்.

வேலூர்,

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

இதற்காக அவர் காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு 10.30 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகம் வருகிறார். முதல் நிகழ்ச்சியாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் 5-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் 3 மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் நடக்கிறது.

3 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், தொற்று பரவலை கட்டுப்படுத்த செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்தும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்கிறார். இதில், கலெக்டர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), சிவன்அருள் (திருப்பத்தூர்), திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை), மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் 60 அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

பின்னர் சிறு, குறுதொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மகளிர் திட்டம் மூலம் செயல்படும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில், வணிகர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் செயல்பாடுகள், கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிகிறார்.

தொடர்ந்து 2-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. இதில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள விவசாய பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிகிறார்.

நிறைவாக மதியம் 1 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். நிருபர்கள் சந்திப்பும் நடக்கிறது. பின்னர் அவர் கிரீன்சர்க்கிள் பகுதியில் உள்ள ஓட்டலில் மதிய உணவு சாப்பிடுகிறார். அங்கிருந்து பிற்பகல் 2 மணியளவில் தருமபுரி புறப்பட்டு செல்கிறார்.

வேலூருக்கு முதல்-அமைச்சர் வருகையையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தலைமையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டுகள் பிரவேஷ்குமார், மயில்வாகனன், விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story