காரையூர் அருகே, கடத்தல் மணல் லாரி மோதி விவசாயி பலி - மற்றொருவர் படுகாயம்; பொதுமக்கள் போராட்டம்
காரையூர் அருகே கடத்தல் மணல் லாரி மோதி விவசாயி பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். விபத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரையூர்,
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள கவிநாரிப்பட்டி ஆற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பொன்னமராவதி தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் வருவாய்த்துறையினர் கீழத்தானியம் ஊராட்சி, ராமலிங்கபுரத்தில் நேற்று அதிகாலை 6 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் டிரைவர் ஒருவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அந்த லாரியை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் மணல் இருப்பது தெரிய வந்தது. பின்னர் அந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை போலீசில் ஒப்படைப்பதற்காக காரையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், ஊர்க்காவல் படையை சேர்ந்த சரவணன் லாரியை ஓட்டி வருவார் என்று அங்குள்ள போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, காலை 11 மணி அளவில் சரவணன் சம்பவ இடத்தில் இருந்து கடத்தல் மணல் லாரியை காரையூர் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
ராமலிங்கபுரம் பஸ் நிறுத்தம் அருகே லாரி சென்றபோது திடீரென தாறுமாறாக ஓடி எதிரே வந்த மொபட் மீதும், சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த கீழத்தானியம் ஊராட்சி மன்ற தலைவர் குமாரின் மாமனாரும், விவசாயியுமான அழகு (வயது 55) மீதும் மோதி நின்றது. இதையடுத்து லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு சரவணன் தப்பி ஓடி விட்டார்.
இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அழகு பரிதாபமாக உயிரிழந்தார். மொபட்டில் வந்த தங்கவேலு (65) படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த தங்கவேலுவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடத்தல் மணல் லாரியை ஓட்டி வந்த சரவணன் மதுபோதையில் இருந்ததாகவும், அவரை கைது செய்ய கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், இலுப்பூர் உதவி கலெக்டர் டெய்சிக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அருள்மொழி அரசு, செங்கமலக்கண்ணன் (பொன்னமராவதி), பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் காரையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின் அழகுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அப்துல்ரகுமானிடம் இறந்த அழகுவின் உறவினர்கள் புகார் மனு கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சுமார் 3 மணி நேரம் நடந்த பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. விபத்தில் இறந்த அழகுக்கு மனைவி மற்றும் மகன், 3 மகள்கள் உள்ளனர்.
விபத்துக்குள்ளான லாரியை மாற்று டிரைவர் மூலம் காரையூர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் எடுத்து சென்றனர். விபத்தில் லாரியின் முன்பக்கம் கண்ணாடி நொறுங்கி சேதமடைந்தது. லாரியில் கடத்தி வரப்பட்ட மணல் அந்த பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. மணல் கடத்தல் தொடர்பாகவும், வருவாய்த்துறை அதிகாரிகள் புகாரின்பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நிருபர்களிடம் கூறுகையில், “ஊர்க்காவல் படையில் பணியாற்றும் சரவணன் கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான லைசென்ஸ் வைத்துள்ளார். இருப்பினும் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story