சூளகிரி அருகே, காட்டு யானை தாக்கி விவசாயி பலி - 4 நாட்களில் 3 பேரை கொன்றதால் பொதுமக்கள் பீதி


சூளகிரி அருகே, காட்டு யானை தாக்கி விவசாயி பலி - 4 நாட்களில் 3 பேரை கொன்றதால் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 20 Aug 2020 3:00 AM IST (Updated: 20 Aug 2020 9:55 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார். 4 நாட்களில் 3 பேரை இந்த யானை கொன்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஏ.செட்டிப்பள்ளி காட்டில் ஒற்றை காட்டு யானை நீண்ட நாட்களாக பதுங்கி இருந்து இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து, அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி காலை புலியரசி கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ஜோகீர்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு நடந்து சென்றபோது, புதரில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை, திடீரென வெளியே வந்து இருவரையும் தாக்கியது. இதில், முனிராஜ், ராஜேந்திரன் ஆகியோர் இறந்தனர்.

இதையடுத்து, யானையை கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் ஏ.செட்டிப்பள்ளி காட்டிற்குள் பதுங்கிய யானையை அங்கிருந்து கர்நாடக பகுதிக்கு விரட்டும் பணி தோல்வியில் முடிந்தது

இந்த நிலையில் நேற்று சூளகிரி அருகே உள்ள ஆபிரி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனுசாமி என்கிற அப்பையா (வயது 57) என்பவர் காட்டு பகுதியில் யானை தாக்கி இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விவசாயியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏ.செட்டிப்பள்ளி காட்டில் இருந்து நள்ளிரவில் ஒற்றை யானை வெளியேறி, அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்தபோது, அந்த வழியாக சென்ற அப்பையாவை மிதித்து கொன்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இறந்து போன அப்பையாவிற்கு மனைவி இல்லை. ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகிறார்கள். அப்பையா, ஆபிரியில் உள்ள விவசாய நிலத்தை கவனித்துகொண்டு அங்கேயே தனியாக வசித்து வந்தார்.

தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானை, நேற்று ஓசூர் அருகே பேரண்ட பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் ஆவேசமாக சுற்றித்திரிந்தவாறு இருந்தது. வனத்துறையினர் பட்டாசு வெடித்து அதனை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அடுத்தடுத்து 4 நாட்களுக் குள் 3 பேரை தாக்கி கொன்று, ஏ.செட்டிப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆக்ரோஷத்துடன் அந்த யானை சுற்றி திரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அட்டகாசம் செய்து வரும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே யானை தாக்கி பலியான விவசாயியின் குடும்பத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பி.முருகன், எஸ்.ஏ.சத்யா ஆகியோர் ஆறுதல் கூறினார்கள். மேலும் வனத்துறையின் முதல் கட்ட நிவாரண நிதியான ரூ.50 ஆயிரத்தை வழங்கினார்கள்.

Next Story