கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2020 4:00 AM IST (Updated: 20 Aug 2020 9:55 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்தநிலையில் மழையின் அளவு குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனிடையே தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டு இருந்தது. இந்தநிலையில் கர்நாடகா மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 2 அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 44,428 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் நேற்று அதிகாலை காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் கரைபுரண்டு ஓடி ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் சத்திரம், நாடார் கொட்டாய், ஊட்டமலை, நெருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

ஒகேனக்கல்லில் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால் நுழைவுவாயிலை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் எனவும், பாதுகாப்பாக இருக்குமாறும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story