கோவையில் பரிதாபம்: ‘நீட்’ தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை
கோவையில் ‘நீட்’ தேர்வு பயத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அரசு ஊழியர். இவருடைய மகள் சுபஸ்ரீ (வயது 19). இவர் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதி இருந்தார். இந்த தேர்வில் மாணவி சுபஸ்ரீ தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து மாணவி மீண்டும் ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். இந்த ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு கடந்த மே மாதம் 3-ந் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதிக்கு நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, ‘நீட்’ தேர்வை நடத்த எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டனர்.
இதையறிந்த மாணவி சுபஸ்ரீ, கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியுமா? என்ற பயத்தில் இருந்ததாக தெரிகிறது. அதன் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் சோகத்துடனே காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி சுபஸ்ரீ தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர், தங்களது மகள் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி சுபஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘நீட்’ தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story