நாகர்கோவிலில் பெண் தாசில்தார் உள்பட 16 பேர் கொரோனாவால் பாதிப்பு - அலுவலகங்கள் கிருமி நாசினி தெளித்து மூடல்
நாகர்கோவிலில் பெண் தாசில்தார் உள்பட 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அலுவலகங்கள் கிருமிநாசினி தெளித்து மூடப்பட்டது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 1700-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நாகர்கோவிலில் உள்ள அரசு ஊழியர்களை கொரோனா மிரட்டி வருகிறது. அதோவது, ஒரே நாளில் நாகர்கோவிலில் மட்டும் 16 அரசு ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், ஒரு டிரைவர் மற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதிப்பெருமாள் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் அந்த அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து, அலுவலகத்தை மூடினர்.
நாகர்கோவில் வடசேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒரு அதிகாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அந்த அலுவலகம் மூடப்பட்டது.
கல்குளம் தாசில்தாராக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவருடைய வீடு நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ளது. அவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய வீட்டில் கிருமி நாசினி தெளித்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பணியாற்றிய தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவருடன் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நில அளவை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பணியாற்றிய அலுவலகத்தில் நேற்று காலை கிருமி நாசினி மருந்து தெளித்து மூடப்பட்டது. உடன் பணியாற்றிய ஊழியர்கள் 10 பேரை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில் கேவ் தெருவில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அந்த அலுவலகமும் மூடப்பட்டது. நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பணியாற்றிய கோர்ட்டு அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. உடன் பணியாற்றியவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கி அலுவலகத்தில் பணியாற்றிய 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அந்த வங்கி மூடப்பட்டது. இவர்களுடன் பணியாற்றிய 20 பேரை கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள நகர்நல மையத்தில் பணியாற்றும் ஒரு செவிலியரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார். அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் ஒரே நாளில் நாகர்கோவிலில் 16 அரசு ஊழியர்கள், அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story