2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது


2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2020 4:13 AM IST (Updated: 21 Aug 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

மதுரையை சேர்ந்த சவுந்திரபாண்டியன்(வயது 41) உள்பட 4 பேரிடம், பெரம்பலூரை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு விரைவில் தடை செய்ய உள்ளதாகவும், அவற்றை 10 சதவீதம் கூடுதல் தொகையுடன் 500 ரூபாயாக மாற்றி தருவதாகவும் கூறியுள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மதுரையை சேர்ந்த 4 பேரும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ரூ.78.80 லட்சத்தை 2 கார்களில் எடுத்துக்கொண்டு, பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதிக்கு வந்து, பணம் மாற்றித்தருவதாக கூறிய கும்பலிடம் கொடுத்தனர்.

பணத்துடன் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பாததால், அவர்களது செல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டிருந்தது. இது குறித்து, சவுந்தரபாண்டியன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் அருகே உள்ள பாப்பாங்கரை கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(42), எறையூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் (38) உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அதில் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது

இதில் முக்கிய நபரான மனோகரன் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மனோகரனை, அவருடைய வீட்டில் வைத்து பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். அப்போது, அவருக்கு உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் அதிகரித்ததால், அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின்னர், மனோகரனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story