நாடாளுமன்ற தேர்தலில் நான் தோற்கடிக்கப்பட்டாலும் விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடுவேன் துமகூரு போராட்டத்தில் தேவேகவுடா பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் நான் தோற்கடிக்கப்பட்டாலும் விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடுவேன் துமகூரு போராட்டத்தில் தேவேகவுடா பேச்சு
x
தினத்தந்தி 21 Aug 2020 5:00 AM IST (Updated: 21 Aug 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் நான் தோற்கடிக்கப்பட்டாலும் விவசாயிகள், தொழிலாளர்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்று துமகூருவில் நடந்த போராட்டத்தின் போது தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள ஏ.பி.எம்.சி. மற்றும் நிலசீர்திருத்த சட்ட திருத்தங்களுக்கு எதிராக ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று தேவேகவுடா அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று துமகூரு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேவேகவுடா தலைமையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அப்போது ஏ.பி.எம்.சி மற்றும் நிலசீர்திருத்த சட்ட திருத்தங்களுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தின் போது தேவேகவுடா பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் துமகூரு தொகுதியில் போட்டியிட்ட என்னை, இந்த மாவட்ட மக்கள் தோற்கடித்து விட்டார்கள். நான் தோற்கடிக்கப்பட்டதால் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். மாநிலங்களவையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பேன். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுவேன். இதற்கு முன்பு பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சென்றவர்கள் என்ன செய்தார்கள்? என்று எனக்கு தெரியும். அவர்களது பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை.

ஏ.பி.எம்.சி. மற்றும் நிலசீர்திருத்த சட்ட திருத்தங்களால் விவசாயிகளும், தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நிலசீர்திருத்த சட்ட திருத்தத்தால் ரியல்எஸ்டேட் அதிபர்களுக்கு மட்டுமே பயன் உள்ளதாக இருக்கும். விவசாயிகளுக்கு எந்த விதமான பலனும் இல்லை. விவசாயிகள் தங்களது நிலத்தை பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். கிராமங்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் விரிவடையும். ஆனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அதனால் அந்த சட்ட திருத்தங்களுக்கு எதிராக நானே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். மற்ற மாவட்டங்களுக்கும் சென்று 2 சட்ட திருத்தங்களுக்கு எதிராக போராடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story