கொரோனா தடுப்பு பணிகளை மேற்பார்வையிட மருத்துவ நிபுணர்கள் குழுவை நியமிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு கிரண்பெடி வலியுறுத்தல்


கொரோனா தடுப்பு பணிகளை மேற்பார்வையிட மருத்துவ நிபுணர்கள் குழுவை நியமிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு கிரண்பெடி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Aug 2020 6:27 AM IST (Updated: 21 Aug 2020 6:27 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்பார்வையிட மருத்துவ நிபுணர்கள் குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று பிரதமருக்கும், மத்திய உள்துறை மந்திரிக்கும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி,

கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் கொரோனா மேலாண்மை மற்றும் தடுப்பு பணிகளை மேற்பார்வையிட மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். புதுச்சேரியில் உள்ள மருத்துவ வளாகங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை மதிப்பாய்வு செய்ய இந்த குழுவை அவசரமாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்.

ஏனெனில் புதுவை மாநில மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். முன்னதாக முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் முதல்-அமைச்சருக்கு உதவவும், ஆலோசனைகள் வழங்கவும் மருத்துவ ஆலோசனைக்குழு தேவை என பரிந்துரைத்தேன்.

மூத்த அரசு செயலாளர் அன்பரசை நிவாரண மற்றும் மறுவாழ்வு ஆணையராக நியமித்து கொரோனா பணிகளை ஒருங்கிணைக்கவும் ஆலோசனை தெரிவித்திருந்தேன். ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி எனது ஆலோசனை ஏற்காமல் அதை நிலுவையில் வைத்து விட்டார். மக்கள் பாதிக்கப்படும் இந்த வேளையில் முக்கியமான விஷயங்கள் செயல்படுத்தாததை பற்றி மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story