கருங்கல் பகுதியில் ஒரே நாளில் 4½ கிலோ கஞ்சா பறிமுதல்; 6 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்


கருங்கல் பகுதியில் ஒரே நாளில் 4½ கிலோ கஞ்சா பறிமுதல்; 6 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 21 Aug 2020 6:35 AM IST (Updated: 21 Aug 2020 6:35 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே ஒரே நாளில் 4½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கருங்கல்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கருங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், இரவு நேரத்தில் சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் சுற்றி திரிவதாகவும் கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

4½ கிலோ கஞ்சா பறிமுதல்

இதையடுத்து கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன அய்யர், ஹரிகுமாரநாயர் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். எட்டணி சந்திப்பில் சென்ற போது, அங்கு சந்தேகப்படும் வகையில் ஸ்கூட்டருடன் நின்ற 2 வாலிபர்களை போலீசார் கண்டனர். அந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். ஆனால், அதற்குள் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, ஸ்கூட்டரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து ஸ்கூட்டருடன் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

இதேபோல், துண்டத்துவிளையில் 2 கிலோ 300 கிராம், மூசாரி பகுதியில் தனியார் பள்ளி முன்பு கஞ்சா விற்றதாக 1 கிலோ 100 கிராம், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 4 வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

மாணவர்களுக்கு...

பின்னர், அவர்கள் 6 பேரிடமும் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது, அவர்கள் கருங்கல் பகுதியை சேர்ந்த ஜீனு (வயது 24), திப்பிரமலையை சேர்ந்த ஷாஜன் (21), குழிக்குளத்தை சேர்ந்த ஜெரோமிமேக்ஸ் (26), கருங்கல் ஆர்.சி. தெருவை சேர்ந்த ஜாண் என்ற ககோடு (35), பள்ளியாடியை சேர்ந்த கென்சோயுவான்ஸ் (28), பள்ளியாடி மாதம்பாலவிளை தினாஷ்ராஜ் (29) என்பது தெரிய வந்தது. அவர்கள், பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர்.

கஞ்சாவை வெளி மாவட்டத்தில் இருந்து மூடைகளில் குமரிக்கு கடத்தி வந்து ரகசிய இடத்தில் வைத்து சிறு சிறு பொட்டலமாக தயார் செய்து மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் அதிக லாபம் கிடைப்பதால் வேலையில்லாத பட்டதாரி வாலிபர்கள் பலர் இதில் ஈடுபட்டுள்ளதும், குறிப்பாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகளை குறி வைத்து கஞ்சாவை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

6 பேர் கைது

பின்னர் அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நேற்று காலை 6 வாலிபர்களும் இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.ஒரே நாள் இரவில் 4½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது கருங்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story