காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தி தலைவராக வேண்டும் என்பது தொண்டர்கள் விருப்பம் கே.எஸ்.அழகிரி பேட்டி


காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தி தலைவராக வேண்டும் என்பது தொண்டர்கள் விருப்பம் கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 21 Aug 2020 7:40 AM IST (Updated: 21 Aug 2020 7:40 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தி தலைவராக வேண்டும் என்பது தொண்டவர்களின் விருப்பம் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் காங்கேயம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று காங்கேயம் அருகே உள்ள சிக்காம்பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். கூட்டத்தில் காங்கேயம், சென்னிமலை, வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் தனித்தனியாக ஆய்வு நடந்தது. இதில் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் சித்திக், திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் செல்வம் ராமசாமி, காங்கேயம் நகர தலைவர் சிதகத்துல்லா, வட்டார தலைவர்கள் சத்தியநாதன், முத்துசாமி, மாவட்ட துணை தலைவர் பண்டுபாய், சென்னிமலை வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், ஜிதேத்திந்திரன், வெள்ளகோவில் நகர தலைவர் ரவி, வட்டார தலைவர்கள் நடராஜ், இந்துராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரை

பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தியின் பிறந்தநாளில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் தொடங்கியுள்ளோம். தோழமை கட்சிகளுடனும், பொதுமக்களுடனும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்களின் பிரச்சினைகளை வருகிற 6 மாத காலத்தில் எவ்வாறு கையாள வேண்டும் என்றும் எடுத்து கூறியுள்ளேன். தேர்தல் என்று வரும்போது, நாமோ, நம்முடைய தோழமை கட்சிகளில் யார் நிற்கிறார்களோ அவர்களை எவ்வாறு வெற்றி பெற வைப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுவார்.

அக்டோபர் மாதம் 20-ந் தேதி இந்த தொகுதியில் 3 நாட்கள் பாத யாத்திரை மேற்கொள்ளப்படும். அனைத்து கிராமங்கள் வாரியாக பாதயாத்திரை குழு செல்லும். நவம்பர் மாதம் 20-ந் தேதி இந்த தொகுதியில் ஒரு அரசியல் மாநாடு நடத்தப்படும். அந்த மாநாடு மதசார்பற்ற கூட்டணியின் கொள்கைகளை பிரகடனப்படுத்தும் வகையிலும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை தூக்கி எறிவதற்கு ஒரு எச்சரிக்கை விடுப்பதற்கான மாநாடாக அமையும்.

தொண்டர்கள் விருப்பம்

இதுதான் காங்கிரஸ் கட்சி தற்போது மேற்கொண்டுள்ள தேர்தல் பணி நிலவரம் ஆகும். இதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் செயல்படுத்துவதற்காக கட்சியில் உள்ள 150 தலைவர்கள் மற்றும் முன்னணி தலைவர்களை ஏற்பாடு செய்துள்ளோம். விரைவில் அவர்களுக்கான தொகுதி எது என்பது குறித்து அறிவிக்கப்படும்.

அதன்பிறகு ஒரே நேரத்தில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் பணிகள் தொடரும். இதன்மூலமாக தமிழக அரசியலில் மிகப்பெரிய மாறுதல் ஏற்படும். பெரிய பொதுக்கூட்டம், பேரணிகளில் இளந்தலைவர் ராகுல்காந்தி, கூட்டணி கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்பார்கள்.

தேச ஒற்றுமைக்காக ஒரே குடும்பத்தில் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகிய 2 பேரை இழந்தவர்கள். அந்த குடும்பத்தில் இருந்து தான் ஒருவரை தலைவராக தொண்டர்கள் தேர்வு செய்வார்கள்.

இந்தியா முழுவதும் உள்ள தொண்டர்கள் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்றும், இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். இதில் மாற்று கருத்து என்பது கிடையாது.

அ.தி.மு.க.வுக்குள் ஒற்றுமை இல்லை

தேர்தல் வருவதற்கு முன்பே அ.தி.மு.க.வில் யார் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று அவர்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள். முதல்-அமைச்சர் ஆட்சியில் இருக்கும்போதே அடுத்த முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்று கேட்டால் அதைவிட மோசமான நிலை இல்லை. அவர்கள் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை. எங்கள் கூட்டணியில் நாங்கள் ஒற்றுமையுடன் உள்ளோம். மதசார்பின்மை என்ற கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ளோம்.

வரும் சட்டமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.எங்களுக்குள் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பது பிரச்சினை இல்லை. எங்கள் கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.

புதிய கல்விக்கொள்கை

கூட்டணி இடஒதுக்கீடு குறித்து ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசி முடிவு செய்வார்கள். புதிய கல்விக்கொள்கையில் பிரச்சினை உள்ளது. வசதியானவர்கள், உயர் சமூகத்தை சேர்ந்தவர்கள், மேல்தட்டு மக்கள் இந்த கல்விக்கொள்கையால் வளர்ச்சி அடையலாம். விவசாயிகள், கிராமப்புற மக்கள், ஏழை மக்கள் வளர்ச்சி அடைய முடியாது. அவரவர்களுக்கு ஏற்ப கல்வியை கொண்டு வர வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.சின் சூழ்ச்சியான செயல் இது. இதை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் நாம் ஒன்று சேர்ந்து புதிய கல்விக்கொள்கையை எதிர்க்க வேண்டும்.

நீட் தேர்வில் விலக்கு

தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சி ஒப்புதலுடன் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்தது. அதை 2 ஆண்டுகள் கழித்து தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு சட்டமன்றத்தில் தெரிவித்தது. அ.தி.மு.க. அரசு இப்போதாவது தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என்று ஒப்புதலை மத்திய அரசிடம் பெறலாம். ராகுல்காந்தி கூறியதைப்போல் நீட் தேர்வை விரும்பாத மாநிலங்கள், அந்த தேர்வில் இருந்து விலக்கு பெறலாம் என்றார். மத்திய அரசு விலக்கு கொடுக்க சட்டத்தில் இடம் உண்டு. எடப்பாடி பழனிசாமி அரசு இதை செய்ய வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யாவிட்டால் அ.தி.மு.க.வோ, பா.ஜனதாவோ தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டு அவர்கள் பொதுமக்களை சந்திக்க முடியுமா, மாணவர் சமுதாயத்தை சந்திக்க முடியுமா என்பது அச்சம் தரும் விசயம் ஆகும்.

தமிழகத்தில் 2-வது தலைநகராக மதுரை வர வேண்டும் என்று பரவலான கருத்து இருந்தது. அது ஏற்கக்கூடியது தான். திருச்சியில் உள்ளவர்கள் தலைநகர் அந்தஸ்து வேண்டும் என்றார்கள். எம்.ஜி.ஆர்.காலத்தில் அந்த கருத்து இருந்தது. திருச்சி 3-வது தலைநகராக இருக்கலாம். எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் ரஜினி, கமல் எங்களுடன் இணையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கேயம் முத்தூர் ரோடு பிரிவில் கல்வெட்டை திறந்து வைத்து ராஜீவ்காந்தி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதைத்தொடர்ந்து வெள்ளகோவிலில் கொடியேற்றி வைத்து ராஜீவ்காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சிக்காம்பாளையத்தில் ராஜீவ்காந்தி உருவ படத்துக்கு மாலை அணிவித்து கொடியேற்றி வைத்தார். திருப்பூர் ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Next Story