உசிலம்பட்டி அருகே லாரிகள் மோதல்; 2 பேர் பலி 3 பேர் படுகாயம்


உசிலம்பட்டி அருகே லாரிகள் மோதல்; 2 பேர் பலி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Aug 2020 8:07 AM IST (Updated: 21 Aug 2020 8:07 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே லாரிகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

உசிலம்பட்டி,

மதுரை அருகே தனக்கன்குளத்தில் இருந்து உசிலம்பட்டி பகுதியில் செங்கல் ஏற்றுவதற்காக லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை வினோத் என்பவர் ஓட்டி சென்றார். இதில் 4 சுமை தூக்கும் தொழிலாளிகள் பயணித்தனர். உசிலம்பட்டி அடுத்து வடுகபட்டி விலக்கு அருகே லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது, ஆண்டிப்பட்டியில் இருந்து உசிலம்பட்டிக்கு செங்கல் ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த 2 லாரிகளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி தனக்கன்குளத்தை சேர்ந்த பால்பாண்டி(வயது 47) என்பவர் உடல் நசுங்கி பலியானார்.

இவரது உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் படுகாயமடைந்த தனக்கன்குளத்தை சேர்ந்த ராமர்(45), லாரி டிரைவர் வினோத்(27), பால்பாண்டி மனைவி பேச்சி(37), சுரேஷ்(22) ஆகியோரை உசிலம்பட்டி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேருக்கு சிகிச்சை

அங்கு ராமர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மற்றொரு லாரி டிரைவர் ரஞ்சித்தை கைது செய்தனர்.

Next Story