கொரோனா நோய்த்தொற்று பரவுவதால் பொது இடத்தில் சிலை வைக்க அனுமதி இல்லை மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு


கொரோனா நோய்த்தொற்று பரவுவதால் பொது இடத்தில் சிலை வைக்க அனுமதி இல்லை மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Aug 2020 2:38 AM GMT (Updated: 21 Aug 2020 2:38 AM GMT)

கொரோனா நோய்த்தொற்று பரவுவதால், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை என்றும், தமிழக அரசின் தடை உத்தரவு செல்லும் என்றும் மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மதுரை,

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

சிலைகள் வைக்க தடை

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு கடந்த 13-ந் தேதி புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதன்படி, விநாயகர் சிலை ஊர்வலத்துக்கும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

ரத்து செய்ய வேண்டும்

நம் நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி (நாளை) இந்த விழா நடக்கிறது. ஆண்டுதோறும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து 11 நாட்கள் வழிபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

எனவே சமூக இடைவெளியுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதிக்க வேண்டும். பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என்றும், ஊர்வலம் செல்லக்கூடாது என்றும் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.

விசாரணை

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப்படவில்லை. தமிழகத்தில் உரிய நிபந்தனைகளுடன் இந்த விழாவுக்கு அனுமதிக்க வேண்டும்” என்று வாதாடினார்.

அரசு வக்கீல் வாதாடுகையில், “விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் விநாயகரை வீட்டில் வைத்து வழிபடவும், அரசு அனுமதித்துள்ள கோவில்களுக்கு சென்று வழிபடவும் எந்த தடையும் இல்லை” என தெரிவித்தார்.

அனுமதிக்க இயலாது

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘தமிழக அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுத்து விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்துக்கு தடை விதித்து இருப்பதால் அதை ரத்து செய்ய முடியாது’ என்றனர்.

மேலும், கொரோனா தொற்றை சமாளிக்க முடியாமல் பெரும்பாலான நாடுகள் திணறும் சூழ்நிலையில் இதுபோன்ற விழாக்களை அனுமதிப்பது எவ்வாறு சாத்தியம்? என்றும், பழமையான, புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாகூட இந்த ஆண்டு நடக்காத நிலையில், விநாயகர் சிலை வைக்க ஏன் அவசரப்படுகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

அத்துடன், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கும் விஷயத்தில் தமிழ்நாட்டை பற்றி மட்டும் பேச வேண்டும், மற்ற மாநிலங்களை உதாரணம் காட்டி பேசுவதை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், விநாயகர் சதுர்த்தி விழாவில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அனுமதிக்க இயலாது என்றும், எனவே இதுதொடர்பான அரசாணையை ரத்து செய்ய முடியாது என்றும் கூறினார்கள். பின்னர், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டு

இதேபோல் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கணபதி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலையை வைத்து வழிப்பட்டு அதை நீர்நிலைகளில் கரைப்பது என்பது ஆண்டாண்டு காலமாக நடக்கும் நிகழ்வு. இது மக்களின் உணர்வுபூர்வமான நிகழ்வு. தற்போது விதிக்கப்பட்ட தடையில் ஏதாவது தளர்வுகள் அறிவிக்க முடியுமா?” என்று அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரலிடம் கேட்டனர்.

தளர்த்த முடியுமா?

பின்னர், “இப்போது மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்கின்றனர். நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது, சிலை வைத்து வழிபட்டு, 5 பேருக்கு மிகாமல் அந்த சிலையை கொண்டு சென்று கடலில் கரைப்பதில் என்ன சிரமம் உள்ளது? கொரோனா பரவலை தடுப்பது என்பது அரசின் கடமை. அதில் நாங்கள் தலையிடவில்லை. அதேநேரம் பெரிய அளவிலான சிலைகளை வைத்து, பல பேர் சேர்ந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கு அனுமதி வழங்கச் சொல்லவில்லை. பேரிடர் விதிகளை பின்பற்றி, சிலைகளை மோட்டார் சைக்கிள்களில் வைத்து கொண்டு சென்று கரைப்பதற்கு அனுமதி வழங்க சாத்தியம் உள்ளதா? விநாயகர் சதுர்த்திக்காக சிலைகளை செய்தவர்கள் கடுமையான நஷ்டத்தை சந்திக்க வேண்டியது இருக்கும். இந்த சிலைகளை அடுத்த ஆண்டு பயன்படுத்தவும் முடியாது. எனவே, தடை உத்தரவை தளர்த்த வாய்ப்பு உள்ளதா?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து அட்வகேட் ஜெனரல், இது குறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவிப்பதாக கூறினார். எனவே இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story