ஐம்பொன் சிலைகளை திருடிய 3 பேர் சிக்கினர்


ஐம்பொன் சிலைகளை திருடிய 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 21 Aug 2020 8:12 AM IST (Updated: 21 Aug 2020 8:12 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளையில் வாலிபர் உள்பட 3 பேர் சிக்கினார்.

மதுரை,

மதுரை சிம்மக்கல் பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான பேச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மரப்பெட்டியில் வைத்திருந்த சுமார் ஒரு அடி உயரமுள்ள விநாயகர் சிலை, குதிரையுடன் அய்யனார் சிலை, பொன்னார் சங்கர் சிலை என 3 ஐம்பொன்சிலைகள், குத்துவிளக்கு போன்றவை கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் அந்த பெட்டியில் உற்சவர் பேச்சியம்மன் உள்ளிட்ட 3 சிலைகள் திருடப்படாமல் அப்படியே இருந்தன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் இரவு 9 மணிக்கு மேல் ஒரு வாலிபர் கோவிலின் பின்புற சுவர் வழியாக ஏறி குதித்து வரும் காட்சி பதிவாகி இருந்தது. அவர் சிலை வைக்கப்பட்டிருந்த மண்டபத்தின் கதவை உடைத்து சிலைகளை திருடி விட்டு, உண்டியலை உடைக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பதை பார்த்து அதை உடைத்து, மின்சாரத்தை தடை செய்துள்ளார். அதன்பின்னர் அவர் 11.30 மணி அளவில் அதே போன்று சுவர் ஏறி குதித்து தப்பி சென்றுள்ளார்.

3 பேர் சிக்கினர்

கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் பழைய குற்றவாளியான செல்லூரை சேர்ந்த ஜெயராமன்(வயது 22) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் உள்பட அனுப்பானடியை சேர்ந்த முகம்மது முஸ்தா(47), புது மீனாட்சிபுரம் கேட்லாக் ரோடு பகுதியை சேர்ந்த செபஸ்தீயான்(49) ஆகியோர் சேர்ந்து சிலையை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 3 சிலைகளையும் மீட்டனர்.

இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனரின் தனிப்படை போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story