சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை உடைப்பு கோவையில் பரபரப்பு


சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை உடைப்பு கோவையில் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Aug 2020 2:46 AM GMT (Updated: 21 Aug 2020 2:46 AM GMT)

கோவை கருப்பகவுண்டர் வீதியில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை கருப்ப கவுண்டர் வீதி- சலீவன் வீதி சந்திப்பு பகுதியில் சாலையோரத்தில் மாகாளியம்மன் கோவில் சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. இதன் அருகே விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை சாலையோரத்தில் இருந்த விநாயகர் சிலை உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். மேலும் இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் பெரியகடை வீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.இதற்கிடையில், மர்ம நபர்கள் விநாயகர் சிலையை உடைத்து சேதப்படுத்தி இருப்பதாக கூறி இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரண்டதால் பரபரப்பு அங்கு ஏற்பட்டது.

முதியவரை பிடித்து விசாரணை

இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் முதியவர் ஒருவர் விநாயகர் சிலையை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்த காட்சியை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கோவிலின் அருகே குடியிருந்து வரும் ராஜப்பன் (வயது 82) என்பவர் தான் சிலையை உடைத்தது தெரியவந்தது. தொடர்ந்து, முதியவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் விநாயகர் சிலையை உடைத்ததை ஒப்புக்கொண்டார். மேலும் வீட்டின் முன்பு ஆக்கிரமித்து சிலை வைக்கப்பட்டதால், அது இடையூறாக இருந்தது என்றும், இதனால் தான் சிலையை உடைத்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

எச்சரித்து அனுப்பி வைத்தனர்

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, முதியவர் ராஜப்பனின் வயது மூப்பை கருதியும், அவரது வீட்டு முன்பு ஆக்கிரமிப்பில் சிலை வைக்கப்பட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலால் இதனை செய்துள்ளதால் அவர் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். சிலை உடைப்பு சம்பவத்தில் உடனடியாக முதியவர் பிடிபட்டதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் முடிவுக்கு வந்தது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story