ஊராட்சி முன்னாள் தலைவர் வீட்டில் நகை பறித்த வழக்கு: 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை


ஊராட்சி முன்னாள் தலைவர் வீட்டில் நகை பறித்த வழக்கு: 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 21 Aug 2020 11:43 PM GMT (Updated: 21 Aug 2020 11:43 PM GMT)

ஊராட்சி முன்னாள் தலைவர் வீட்டில் நகை பறித்த வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வலங்கைமான் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கண்டியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன்(வயது 62). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி வைத்தியநாதன் தனது மனைவி, மகளுடன் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வைத்தியநாதனின் மனைவி அனிதா மற்றும் மகள் சிந்துஜா ஆகியோரின் கழுத்தில் கிடந்த 15 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து வலங்கைமான் போலீசில் வைத்தியநாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த தனிப்படை மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பந்தநல்லூர் செருகுடி மேல தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார்(20), அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(32), மன்னார்குடியை அடுத்த சித்தமல்லி சமத்துவபுரம் மாளிகை தெருவை சேர்ந்த கார்த்தி(26), அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (27) ஆகியோர் என்பதும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் இவர்கள் 4 பேரும் நகைகளை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து வலங்கைமான் போலீசார் 4 பேரையும் கைது செய்து வலங்கைமான் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

தலா 5 ஆண்டுகள் சிறை

இதுதொடர்பாக வலங்கைமான் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி பிரபுசங்கர் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story