கொரோனா தாக்கம் குறைந்த பிறகு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


கொரோனா தாக்கம் குறைந்த பிறகு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 22 Aug 2020 6:30 AM IST (Updated: 22 Aug 2020 6:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தாக்கம் குறைந்த பிறகு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நம்பியூர்,

அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு ரூ.1,784 கோடியை தமிழக அரசு தனிப்பட்ட முறையில் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மின்சார செலவு கூட விவசாயிகள் செய்யக் கூடாது என்பதற்காக ரூ.64 கோடியில் சோலார் மின் திட்டம் உருவாக்கப்பட்டு பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. சிறு குளங்களை கூட இணைக்கும் வகையில் 6 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக விவசாயிகள் தங்களது நிலங்களை வழங்கி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற முடியும்.

நீட் பயிற்சி

10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்வி, நீட் பயிற்சி புரியவில்லை என சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்த இன்னும் முழுமையான விசாரணை நடைபெற்று முடியவில்லை. அது முடிந்தால் தான் எதுவும் கூற முடியும். இதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு ஆகாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

காலாண்டு தேர்வு

சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் மாற்று சான்றிதழ் வழங்குவதற்கு நன்கொடை பெறுவதாக இதுவரை எந்த புகார்களும் வரவில்லை. புகார்கள் வந்தால் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசு இருமொழிக் கொள்கை என்பதில் உறுதியாக உள்ளது. மேலும் இதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள கல்வியாளர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு குழுவை ஏற்படுத்தி அவர்கள் வழிகாட்டுதல்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொள்வார். கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பிறகு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Next Story