ஓயாத கொசுக்கடியால் தூக்கத்தை தொலைத்து அவதிப்படும் மக்கள் நள்ளிரவு தாண்டியும் ‘கொசு பேட்’களின் சத்தம் ஒலிக்கிறது


ஓயாத கொசுக்கடியால் தூக்கத்தை தொலைத்து அவதிப்படும் மக்கள் நள்ளிரவு தாண்டியும் ‘கொசு பேட்’களின் சத்தம் ஒலிக்கிறது
x
தினத்தந்தி 22 Aug 2020 7:26 AM IST (Updated: 22 Aug 2020 7:26 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொசுக்கடி ஓயாத நிலை இருக்கிறது. கொசுக்கடியால் தூக்கத்தை தொலைத்து மக்கள் அவதிப்படுகிறார்கள். நள்ளிரவு தாண்டியும் ‘கொசு பேட்’களின் சத்தம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சென்னை,

தமிழகத்திலேயே தலைநகர் சென்னையை கொரோனா பாதிப்பு உலுக்கி வருகிறது. இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா பீதி ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது கொசுக்கள்.

சமீபகாலமாக சென்னையில் கொசுக்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. உடலில் ஊசி கொண்டு குத்துவதைப் போல கடிக்கும் கொசுக்களால் மக்கள் நிம்மதியை தொலைத்து விடுகிறார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது.

கொரோனா பீதியில் இருக்கும் போதே, கொசுக்கடி பிரச்சினையும் தலைதூக்கியிருக்கிறது. மலேரியா, டெங்கு உள்பட மழைக்கால நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொரு வீடுகளிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஜன்னல்கள், வாசல்களில் கொசு வலைகள் அடிக்கப்பட்டு விட்டன. ஆனால் காப்பானை விட கள்ளனே திறமைசாலி எனும் வகையில் ஏதாவது ஒரு வகையில் கொசுக்கள் வீட்டில் நுழைந்து விடுகின்றன.

இதன் காரணமாக கொசுக்கடியால் தூக்கத்தை தொலைத்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். கொசுவை ஒழிக்கும் நடவடிக்கையில் கொசுவர்த்தி சுருள், திரவக்கொசு விரட்டி போன்றவற்றை பயன்படுத்தினாலும், அது பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். இதனால் வீடுகளில் தற்போது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக ‘கொசு பேட்’களும் வாங்கி வருகிறார்கள்.

ஒவ்வொரு வீடுகளிலும் செல்போனுக்கு சார்ஜ் கொடுக்கிறார்களோ இல்லையோ, எந்த நேரமும் சார்ஜ் ஏறிய மயமாகவே ‘கொசு பேட்’கள் காட்சி அளிக்கின்றன. தன்னை கடிக்க வரும் கொசுக்களை, ‘கொசு பேட்’ கொண்டு அழிப்பதில் மக்களின் ஆர்வத்தை பார்க்கமுடிகிறது. கொசுக்கடியால் தூக்கம் பறிபோன நிலையில் நள்ளிரவு தாண்டியும் ஒவ்வொரு வீடுகளிலும் ‘சட்.... சட்... சட்...’ என ‘கொசு பேட்’ கொண்டு கொசுக்கள் வேட்டையாடப்படும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தினமும் கொசுக்கடியால் நிம்மதி தொலைகிறது. எனவே கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம், கொசு ஒழிப்பு பணிகளிலும் தீவிரம் காட்டினால் நன்றாக இருக்கும். குடியிருப்பு பகுதிகளில் தினந்தோறும் கிருமிநாசினி தெளிப்பதுடன், கொசு மருந்து அடிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Next Story