கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத 8 பேருக்கு பிடிவாரண்டு ஊட்டி கோர்ட்டு உத்தரவு


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத 8 பேருக்கு பிடிவாரண்டு ஊட்டி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Aug 2020 7:41 AM IST (Updated: 22 Aug 2020 7:41 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத 8 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், மனோஜ், மனோஜ்சாமி, உதயகுமார், திபு, சந்தோஷ்சாமி, ஜித்தின்ராய், சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. சயான், மனோஜ் ஆகிய 2 பேரும் கோவை மத்திய சிறையில் உள்ளனர். மற்ற 8 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

சயான், மனோஜ் ஆஜர்

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேரால் விசாரணைக்கு ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சாட்சிகளிடம் விசாரணை நடத்த முடியாமல் தள்ளிப்போனது. இதற்கிடையே வழக்கில் 22-வது சாட்சியான சாந்தா கோடநாடு வழக்கை விரைந்து முடிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு, கோடநாடு வழக்கை 3 மாதத்துக்குள் விரைந்து முடிக்க ஊட்டி கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரும் நேற்று ஆஜராக வேண்டும் என்று ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் உள்ள சயான், மனோஜ் ஆகிய 2 பேரையும் பாதுகாப்புடன் கோவையில் இருந்து போலீசார் ஊட்டி கோர்ட்டுக்கு அழைத்துச்சென்றனர். அவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்ததுடன், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

8 பேருக்கு பிடிவாரண்டு

ஆனால் ஜாமீனில் வெளியே உள்ள 8 பேரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அத்துடன் அவர்களின் சார்பில் வக்கீல்களும் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 8 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

அத்துடன் வழக்கு விசாரணை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பால நந்தகுமார் ஆஜரானார். கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வரும்போது சயான், அங்கிருந்த நிருபர்களை பார்த்து பணத்துக்காக வழக்கை விரைந்து முடிக்க உள்ளதாகவும், கோடநாடு எஸ்டேட்டுக்கு அடிக்கடி வருகை தரும் கூடலூரை சேர்ந்த ஒரு நபர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் சயான், மனோஜ் ஆகியோரை போலீசார் கோவை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

Next Story