விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம் சமூக இடைவெளியை மறந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம்


விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம் சமூக இடைவெளியை மறந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 22 Aug 2020 10:13 AM IST (Updated: 22 Aug 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விழுப்புரத்தில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை மறந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்,

விநாயகர் அவதரித்த நாள் விநாயகர் சதுர்த்தி விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாகவும், பொதுமக்களின் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாறாக வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூஜை பொருட்கள் வாங்க கூட்டம்

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை மற்றும் தேங்காய், பழம் ஆகியவற்றை படைத்து வழிபாடு நடத்தப்படும். இதையொட்டி விழுப்புரம் எம்.ஜி. சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள மார்க்கெட்டில் நேற்று பூஜை பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாழைத்தார், இலை, தேங்காய், பழங்கள், கரும்பு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை வாங்கிச்சென்றனர். மேலும் விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை வாங்குவதற்காக விழுப்புரத்தில் உள்ள மார்க்கெட்டுகள், நேருஜி சாலை, கே.கே.சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் வீதி உள்ளிட்ட கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சமூக இடைவெளியை மறந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா என்கிற சங்கிலித்தொடரை உடைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நோய் பாதிப்பு எண்ணிக்கை மாவட்டத்தில் 6 ஆயிரத்தை நெருங்கி வருகிற சூழ்நிலையில் தனிமனித இடைவெளியை காற்றில் பறக்க விட்டதுபோல், அதனை மறந்து விட்டு கூட்டநெரிசலில் கடைகளில் பொருட்களை பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். இதை பார்க்கும்போது கொரோனா பரவல் அதிகரிக்க இவர்களே வழிவகுப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியை பொறுத்தவரை இங்குள்ள மந்தைவெளியில் ஆண்டுதோறும் விநாயகர் சிலை விற்பனை நடைபெறும். ஒரு அடி முதல் 15 அடி உயரம் வரை, பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். கள்ளக்குறிச்சி மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து இளைஞர்கள் மினிலாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வந்து விநாயகர் சிலைகளை வாங்கி செல்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விற்பனை செய்ய அரசு தடை விதித்தது. சிறிய விநாயகர் சிலைகளை வாங்கி வீட்டில் வைத்து வழிபட அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது. இதையடுத்து நேற்று கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் ஒரு அடி முதல் 1½ அடி உயரம் உள்ள சிறிய விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதேபோல் மாலை நேரத்தில் பூஜைக்கு தேவையான பொருட்களின் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

Next Story