பண்ருட்டி கோவிலில் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு: வாலிபரை கொன்று விட்டு நாடகமாடிய கள்ளக்காதலி, அர்ச்சகருடன் கைது


பண்ருட்டி கோவிலில் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு: வாலிபரை கொன்று விட்டு நாடகமாடிய கள்ளக்காதலி, அர்ச்சகருடன் கைது
x
தினத்தந்தி 22 Aug 2020 6:07 AM GMT (Updated: 2020-08-22T11:37:20+05:30)

பண்ருட்டி வாலிபரை கொலை செய்து கோவிலில் புதைக்கப்பட்ட அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அவரை கொன்று விட்டு நாடகமாடிய கள்ளக்காதலி, அர்ச்சகருடன் கைது செய்யப்பட்டார்.

பண்ருட்டி,

பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் மஞ்சுளா(வயது 29). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுளா தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மஞ்சுளாவுக்கும், பண்ருட்டியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்த பணிக்கன்குப்பத்தை சேர்ந்த கண்ணதாசன்(34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வி.ஆண்டிக்குப்பத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி கடைக்கு வேலைக்கு சென்ற கண்ணதாசன், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அர்ச்சகர் வீட்டில் வேலை

அப்போது கண்ணதாசன், மஞ்சுளா ஆகியோரின் செல்போன் எண்ணை பெற்று, அதில் யார்-யாரிடம் பேசியுள்ளார்கள் என்று ஆய்வு செய்தனர். அப்போது மஞ்சுளா பலரிடம் செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மஞ்சுளா, அதே ஊரில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் அர்ச்சகரும், பிரபல ஜோதிடருமான கோபிநாத்(52) என்பவரது வீட்டில் வேலை பார்த்து வந்தார். மஞ்சுளா வேலை முடித்து வீட்டுக்கு வந்த பிறகும், கோபிநாத்துடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை கண்ணதாசன் கண்டித்துள்ளார். இருப்பினும் மஞ்சுளா கேட்காமல் கோபிநாத்துடன் செல்போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் மஞ்சுளாவுக்கும், கோபிநாத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கண்ணதாசன், கோபிநாத்தின் வீட்டுக்கு சென்று அவரையும், அவரது குடும்பத்தினரையும் திட்டியதாக தெரிகிறது.

புகார் கொடுத்து நாடகமாடினார்

இதனால் கண்ணதாசனை தீர்த்துக்கட்ட மஞ்சுளாவும், கோபிநாத்தும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 12-ந்தேதி கண்ணதாசனை சமாதானப்படுத்துவதற்காக கோபிநாத் அவரை வேணுகோபாலசாமி கோவிலுக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கிருந்த மஞ்சுளா மற்றும் சிலர் சேர்ந்து இரும்பு கம்பியால் கண்ணதாசனை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். பின்னர் கோவிலில் பூஜை பொருட்கள் வைக்கப்படும் அறையில் பள்ளம் தோண்டி கண்ணதாசனின் உடலை புதைத்தனர். தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக மஞ்சுளா போலீசில் புகார் செய்து நாடகமாடியுள்ளார்.

2 பேர் கைது

இதையடுத்து மஞ்சுளா, கோபிநாத் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் வேணுகோபாலசாமி கோவில் பூஜை பொருட்கள் அறையில் புதைக்கப்பட்டிருந்த கண்ணதாசனின் உடல், தாசில்தார் உதயகுமார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story