பூட்டிய வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி பிணம் எரித்துக்கொலையா? போலீசார் விசாரணை


பூட்டிய வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி பிணம் எரித்துக்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Aug 2020 12:06 PM IST (Updated: 22 Aug 2020 12:06 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே பூட்டிய வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி பிணமாக கிடந்தார். அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமம் தேவாங்கபுரம் ரெயில்வே ஸடேஷன் ரோட்டை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 65). இவர் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். மேலும் 100 நாள் பணிக்கும் சென்று வந்துள்ளார். இவரைப் பார்க்க நேற்று காலை வண்ணாங்குளம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த அவரது மகள் கோமதி வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு தீயில் கருகி சாம்பலாக ராஜேஸ்வரி பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த கோமதி அதிர்ச்சி அடைந்தார்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீடு முழுக்க மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்தது. தடய அறிவியல் நிபுணர் பாரி தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் மியா வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொலையா?

கொள்ளையர்கள் யாரேனும் வந்தார்களா? அல்லது நகை பணத்துக்காக நடந்த சம்பவமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருகிய நிலையில் கிடந்த ராஜேஸ்வரி வீட்டின் நுழைவு கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்ட நிலையில் இருந்ததால் மர்ம நபர்கள் யாரேனும் எரித்துவிட்டு தப்பியிருக்கலாமோ? என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story