ராணிப்பேட்டை, சிப்காட் பகுதிகளில் ஆரவாரம் இல்லாமல் வீட்டிலேயே நடந்த விநாயகர் சதுர்த்தி விழா


ராணிப்பேட்டை, சிப்காட் பகுதிகளில் ஆரவாரம் இல்லாமல் வீட்டிலேயே நடந்த விநாயகர் சதுர்த்தி விழா
x
தினத்தந்தி 23 Aug 2020 3:00 AM IST (Updated: 23 Aug 2020 2:40 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை, சிப்காட் ஆகிய பகுதிகளில் ஆரவாரம் இல்லாமல் வீட்டிலேயே பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.

சிப்காட்,(ராணிப்பேட்டை),

விநாயகர் சதுர்த்தி என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். பல்வேறு தெருக்கள், கோவில்களின் முன்பு பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். அதற்காக சரக்கு ஆட்டோக்கள், வேன்கள், மாட்டு வண்டிகள் ஆகியவற்றில் விநாயகர் சிலைகளை ஏற்றிச்செல்வார்கள்.

அந்த விநாயகர் சிலைகள் மூஷிக வாகனத்தின் மீது அமர்ந்த விநாயகர், மோட்டார்சைக்கிள் ஓட்டும் விநாயகர், பாகுலி படத்தில் வரும் தோற்றத்தில் விநாயகர், மருத்துவம் பார்க்கும் விநாயகர் என விதவிதமாக இருக்கும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும்.

கொழுக்கட்டைகள், சுண்டல், பழங்கள் ஆகியவை நைவேத்தியம் செய்து பொதுமக்களுக்கு வழங்குவார்கள். ரூபாய் நோட்டுகள், பலவண்ண மலர் மாலைகள் ஆகியவற்றால் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள்.

வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளை இறுதிநாளில் வாகனங்களில் ஏற்றி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். தற்போது கொரோனா தொற்றால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு கொரோனா பரவலால் ராணிப்பேட்டை, சிப்காட் பகுதிகளில் பொதுமக்கள் ஆரவாரம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழாவை தங்களின் வீடுகளிலேயே கொண்டாடினர். குறிப்பாக பொதுமக்கள், பக்தர்கள் களிமண்ணால் செய்த சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி வந்து வீடுகளில் வைத்து வழிபட்டனர்.

அதேபோல் திருவலம், பொன்னை, மேல்பாடி ஆகிய பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் தங்களின் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாக நடக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், அனைத்துப் பகுதிகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

Next Story