ஆதிதிராவிட விவசாயிகள் சூரியசக்தி பம்புசெட்டுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிட விவசாயிகள் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர்,
மத்திய அரசின் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 5 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட திறந்தவெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவீத அரசு மானியத்தில் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2020-21-ம் நிதி ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு சூரியசக்தியில் இயங்கும் 199 மோட்டார் பம்புசெட்டுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்புக் கோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் அவர்களுடைய மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. தங்களுக்குரிய இலவச மின் இணைப்புமுறை வரும்பொழுது சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளைமின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மதக் கடிதத்தை சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்கவேண்டும்.
தடையில்லா சான்று
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை மின் கட்டமைப்புடன் வரும் காலங்களில் இணைத்திட விரும்பும் விவசாயிகள், இலவச மின் இணைப்பு கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்திட விண்ணப்பம் அளிக்கும் பொழுது, சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை நுண்ணீர் பாசனத்துடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும்.
வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள், கரை இடப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள், நிலத்தடிநீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட தொலைவிற்குள் நிலத்தடிநீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வெண்டும். இந்த வரம்பிற்குள் உள்ள நீர் ஆதாரங்களுக்கு சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் பொழுது பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்றினை இணைத்திடவேண்டும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற ஆர்வமுடைய விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், தண்ணீர் பந்தல், பெரம்பலூர் அலுவலகம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக செயற்பொறியாளர்அலுவலகங்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story