நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு


நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 23 Aug 2020 5:07 AM IST (Updated: 23 Aug 2020 5:07 AM IST)
t-max-icont-min-icon

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

புதுக்கோட்டை,

கொரோனா ஊரடங்கின் காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமாக கொண்டாடப்படவில்லை. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் வீடுகள், அலுவலகங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி நீர்நிலைகளில் கரைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்து அமைப்பினர் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி ஒரே நாளில் கரைக்க அந்த அமைப்பை சேர்ந்த மாநில நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்பினர் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட, வண்ணம் பூசிய விநாயகர் சிலைகளை தங்களது வீடுகள் மற்றும் அலுவலகத்தில் நேற்று காலை வைத்து வழிபாடு நடத்தினர். இதில் பிரமாண்ட சிலைகள் எதுவும் இல்லாமல் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

சிலைகள் கரைப்பு

புதுக்கோட்டையில் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் உள்பட இந்து அமைப்பினர் வைத்து வழிபாடு நடத்திய விநாயகர் சிலைகளை அவர்கள் மட்டும் தனியாக காரில் எடுத்து வந்து நேற்று மாலை புதுக்குளத்தில் கரைத்தனர். ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதனை மீறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

புதுக்குளத்தில் கரைப்பகுதியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தாமஸ் பிரபாகரன் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

63 இடங்களில்...

இதேபோல் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே இந்து அமைப்பினர் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைத்தனர். மேலும் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்திய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் நீர்நிலைகளில் கரைத்தனர். சிலைகள் கரைப்பில் தமிழக அரசு மற்றும் கோர்ட்டு உத்தரவை மீறாமல் இருப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் ஆங்காங்கே என மொத்தம் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாவட்டத்தில் இந்து அமைப்பு மற்றும் தனிநபர்கள் சார்பில் என மொத்தம் 63 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை நேற்று ஒரே நாளில் கரைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கின் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்து காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை சற்று உயர்ந்திருந்தது.

பொன்னமராவதி

பொன்னமராவதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இந்து முன்னணி ஒன்றிய தலைவர் சேதுமலையாண்டி தலைமை தாங்கினார். ராஜா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பொன்னமராவதி ஜெ.ஜெ. நகரில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிலையை தூக்கிக்கொண்டு பஸ் நிலையம், அண்ணா சாலை வழியாக வந்து பொன்.புதுப்பட்டி சேங்கை ஊரணிக்கரையில் நிறைவுபெற்றது. பின்னர் விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, சேங்கை ஊரணியில் கரைக்கப்பட்டது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story