கொரோனாவுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம்
தஞ்சையில் கொரோனாவுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். அவரது உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை வெண்ணாற்றங்கரை சத்தியகிருஷ்ணா நகரில் வசித்து வந்தவர் கருணாகரன்(வயது56). இவர் தோகூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த 17-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். ஆனால் சளி, இருமல் அதிகமானதால் கடந்த 19-ந் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கருணாகரன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றுபிற்பகல் கருணாகரன் உயிரிழந்தார்.
போலீசார் மரியாதை
பின்னர் அவரது உடல், தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான சாந்திவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கருணாகரன் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் நவீன தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு, எரியூட்டப்பட்டது. இறந்த கருணாகரனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், கார்த்திகேயன், பாலாஜி ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கருணாகரன் கடந்த 1984-ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்து 36 ஆண்டுகாலம் பணி புரிந்து சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story