நாமக்கல் மாவட்டத்தில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 42 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 42 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Aug 2020 12:47 AM GMT (Updated: 2020-08-23T06:17:01+05:30)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,515 ஆக உயர்ந்து உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 1,476 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 3 பேரின் பெயர்கள் பிறமாவட்ட பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதால், நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,473-ஆக குறைந்தது.

இந்த நிலையில் நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 47 வயதுடைய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதேபோல் கொக்கரையான்பேட்டையில் வங்கியின் உதவி மேலாளராக பணியாற்றி வந்த 31 வயதுடைய ஆண் ஒருவருக்கும், புதுச்சத்திரத்தை சேர்ந்த ஆசிரியரான 39 வயதுடைய ஆண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

42 பேருக்கு கொரோனா

மேலும் நாமக்கலில் 61 வயது பெண் உள்பட 3 பேரும், மாணிக்கம்பாளையம் துணை செவிலியர் பயிற்சி பள்ளியின் 5 பெண்களும், குமாரபாளையத்தில் 70 வயதுடைய மூதாட்டி உள்பட 6 பேரும், பள்ளிப்பாயைத்தில் 3 பேரும், ராசிபுரத்தில் 4 பேரும், புதுச்சத்திரத்தில் 2 பேர் உள்பட 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனிடையே பிறமாவட்ட பட்டியலில் இருந்து 3 பேரின் பெயர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதால், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,515 ஆக உயர்ந்து உள்ளது.

இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 41 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இதுவரை 1,054 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 29 பேர் உயிரிழந்த நிலையில், 432 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story