சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
சேலம்,
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு கூட்டங்களை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அதன்படி கடந்த 20-ந் தேதி வேலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நடந்த ஆய்வு கூட்டங்களில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டார். அதன் பிறகு நேற்று முன்தினம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த இனிவரும் நாட்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நாமக்கல்லில் இருந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை
இந்த நிலையில், சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு நேற்று காலை 10.30 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அப்போது அவருக்கு அதிகாரிகளும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர். அங்கு மாவட்ட அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாஜலம், வெற்றிவேல், சக்திவேல், மனோன்மணி, ராஜா, சித்ரா, சின்னத்தம்பி, மருதமுத்து மற்றும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க பொருளாளர் பங்க் வெங்கடாஜலம் உள்பட ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய உறுப்பினர் சேர்க்கை
கூட்டத்தில், அ.தி.மு.க. விற்கு புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கட்சி நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார். மேலும் சில முக்கிய நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து அவர் ஆலோசனை வழங்கினார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சேலத்தில் இருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என கூறப்படுகிறது. இதையொட்டி அவர் செல்லும் பாதையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story