கோவையில் கொரோனாவுக்கு 4 பேர் பலி அதிவிரைவுப்படை வீரர்கள் உள்பட 389 பேருக்கு தொற்று


கோவையில் கொரோனாவுக்கு 4 பேர் பலி அதிவிரைவுப்படை வீரர்கள் உள்பட 389 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 23 Aug 2020 7:15 AM IST (Updated: 23 Aug 2020 7:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள். மேலும் அதிவிரைவுப்படை வீரர்கள் உள்பட 389 பேருக்கு தொற்று உறுதியானது.

கோவை, 

கோவை அருகே வெள்ளலூரில் மத்திய அரசின் அதிவிரைவுப்படை முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு சமீபத்தில் வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் 30, 35, 40, 41 ஆகிய வயது உடைய வீரர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கோவைப்புதூரில் உள்ள மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 27 வயது காவலர், 43 வயது பெண் காவலர், போத்தனூர் ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த 57 வயது ஆண் காவலர், அரசு மருத்துவமனையின் நர்ஸ் பயிற்சி பள்ளி மாணவிகள் 2 பேர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்கள் தவிர துடியலூரை சேர்ந்த 20 பேர், கோவைப்புதூரை சேர்ந்த 13 பேர், பீளமேட்டை சேர்ந்த 12 பேர், செல்வபுரம் மற்றும் கணபதியை சேர்ந்த தலா 11 பேர், பொள்ளாச்சி மற்றும் சூலூர் பகுதியை சேர்ந்த தலா 6 பேர் என நேற்று கோவை மாவட்டம் முழுவதும் மொத்தம் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,358 ஆக உயர்ந்து உள்ளது.

4 பேர் பலி

இதற்கிடையில் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 66 வயது ஆண், 54 வயது பெண், 67 வயது ஆண் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 40 வயது ஆண் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.

கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 312 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து தற்போது 3,151 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 7,972 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Next Story