இன்று முழு ஊரடங்கு அமல்: அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது


இன்று முழு ஊரடங்கு அமல்: அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 23 Aug 2020 7:29 AM IST (Updated: 23 Aug 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் ஊட்டியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, 4-வது ஞாயிற்றுக் கிழமையான இன்று நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.

முழு ஊரடங்கை ஒட்டி ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் என மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்காது. ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் ஓடாது. இதனால் ஊட்டியில் காய்கறிகள், இறைச்சிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.

கூட்டம் அலைமோதியது

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள இறைச்சிக் கடைகளில் மீன், கோழி, மாடு, ஆடு போன்ற இறைச்சிகளை வாங்க மக்கள் அதிகளவில் திரண்டனர். அத்துடன் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க தரையில் வட்டங்களோ அல்லது கோடுகளோ வரையப்படாததால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக நின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் காணப்பட்டது. காய்கறிகள் வாங்க வந்தவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தினர்.

வெளியே வரக்கூடாது

இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்களை அங்கிருந்து அகற்ற உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அந்த வாகனங்கள் அகற்றப்பட்டன. இன்று முழு ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும், காரணம் இல்லாமல் வெளியே வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Next Story